January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அமைக்கப்படவுள்ள சீனாவின் கொரோனா தடுப்பூசி தொழிற்சாலை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் உற்பத்தி தொழிற்சாலையொன்று அமைக்கப்படவுள்ளது.

சீனாவின் முன்னணி மருந்து நிறுவனமொன்றினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையின் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் சீனா அரசுக்கு சொந்தமான நிறுவனமான சினோவெக் பயோடெக் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் கீழ் இந்த தடுப்பூசி தொழிற்சாலை நிறுவப்படும் என சீனாவுக்கான இலங்கை தூதர் பாலித கொஹன ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

இதன்மூலம் சீனாவும், இலங்கையும் தங்கள் இருதரப்பு தடுப்பூசி இராஜதந்திரத்தை விரிவுபடுத்தவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தப் புதிய கொரோனா தடுப்பூசி தொழிற்சாலை ஒரு உடன்படிக்கையின் கீழ் அமைக்கப்படும் என்று சீனாவுக்கான இலங்கை தூதர் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஹம்பாந்தோட்டையில் உள்ள பிரத்தியேக மருந்து உற்பத்தி மண்டலத்தில் இந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சினோவெக் தடுப்பூசியானது அவசர பயன்பாட்டுக்கான பட்டியலின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சீன தடுப்பூசிகளில் ஒன்றாகும். மற்றொன்று சீன அரசுக்கு சொந்தமான சினோபார்ம் சீன நிறுவனத்துக்கு உரியது.