இலங்கையில் கல்வி, சுகாதாரம், வெளிவிவகாரம், ஊடகத்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டவர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது, இதுவரையில் கல்வி அமைச்சராக பதவி வகித்த ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த தினேஸ் குணவர்தன, கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இதேவேளை ஊடகத் துறை அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும், வலுச்சக்தி அமைச்சராக பதவி வகித்த டலஸ் அழகப் பெரும ஊடகத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளதுடன், போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த காமினி லொகுகே வலுச் சக்தி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்த பவித்திரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன் நாமல் ராஜபக்ஷ தான் வகிக்கும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சராக பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.