January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களின் மரணத்துடன் ஜனாதிபதி விளையாடிக் கொண்டுள்ளார்; ஜே.வி.பி குற்றச்சாட்டு

கொவிட் -19 வைரஸை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதுடன்,மக்களின் மரணத்துடன் ஜனாதிபதி விளையாடிக் கொண்டுள்ளதாகவும்,நாட்டின் பொருளாதாரம் குறித்து இப்போது சிந்திக்காது உடனடியாக நாட்டை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 வைரஸ் பரவல் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகள் பொய்யாகிக் கொண்டுள்ளது.சுகாதார வைத்திய அதிகாரிகள் நேரடியாக இதனை கூறி வருகின்றனர்.இவ்வாறான வைரஸ் தொற்றுப்பரவல் நிலைமையை கட்டுப்படுத்த எதிர்வுகூறல் அவசியமாகும்.அதற்கு உண்மையான தரவுகள் வெளிப்பட வேண்டும்.ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ உண்மையான தரவுகளை மறைத்து வைரஸ் தொற்றில் இருந்து விடுபட நினைக்கின்றார்.

உண்மையான தரவுகள் வழங்கப்பட்டால் மட்டுமே வைரஸ் தொற்றின் பாரதூரமான நிலைமை குறித்த அவதானம் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்.நாட்டின் விசேட வைத்திய அதிகாரிகள், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் சுகாதார தரப்பினர்,சுகாதார பணியகம்,சுகாதார அமைச்சர் அனைவருமே நாட்டை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பிரதமரும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் வலியுறுத்தியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் மரணத்துடன் விளையாடுகின்றார். தேவையான நேரத்தில் முறையான தீர்மானம் எடுக்காது போலியான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்.திருமண நிகழ்வில் நபர்களை குறைக்கவும்,பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவும்,60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றவும் என கூறிக் கொண்டுள்ளார்.

இவர்கள் கொரோனா ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் எமது உறவுகள் கொல்லப்படுகின்றனர்.எமது மக்களின் வாழ்க்கையை கோட்டாபய ராஜபக்ஷ அடகு வைத்து அரசியல் விளையாடி வருகின்றார்.இதனை உடனடியாக ஜனாதிபதி கைவிட வேண்டும். சுகாதார வைத்திய அதிகாரிகள் கூறும் விதத்தில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும்.அதுவே இப்போது அவசியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.