
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2016 ஆம் ஆண்டில் பணியாற்றிய யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கடந்த ஜுலை 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட அவர், விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளதுடன், சந்தேகநபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஹிஷாலினியின் மரணத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, 2016 ஆம் ஆண்டில் அந்த வீட்டில் பணியாற்றிய 22 வயது யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன்படி அவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.