
ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் 50 இலங்கையர்கள் நாடு திரும்ப காத்திருப்பதாக அங்குள்ள இலங்கைத் தூதுவர் அத்மிரால் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றிவளைத்துவிட்டதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
அனைத்து பக்கத்தில் இருந்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை தாலிபான்கள் காபூல் நகருக்குள் புகுந்துள்ளனர்.
இதன்படி வெகுவிரைவில் அந்த நகரம் முழுமையாக அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரவுள்ளது.
இந்நிலையில் காபூல் நகரில் உள்ள வெளிநாட்டவர்கள் வெளியேற விரும்பலாம். அல்லது அவர்கள் தங்களிடம் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்றும் தாலிபான்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை இன்னும் ஆப்கானிஸ்தானில் உள்ள படையினர் உதவியுடன் தங்கள் தூதரக ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. ஹெலிகப்டர்களின் உதவியுடன் அவர்கள் மீட்கப்படுகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் அங்குள்ள இலங்கையர்கள் 50 பேர் நாடு திரும்ப வேண்டுமென்று கூறியுள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் காபுல் நகரில் உள்ள அதிகாரிகள் உள்ளிட்ட இலங்கையர்களை ஐநாவின் உதவியுடன் அங்கிருந்து வெளியே கொண்டுவர தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.