November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரத்த தானம் செய்யுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு இரத்தம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப இரத்த தானம் செய்ய முன்வருமாறு தேசிய இரத்த மாற்ற சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக இரத்த தானம் வழங்கும் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக நாட்டில் இரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக இரத்த மாற்ற சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள், தலசீமியா நோயாளிகள், புற்று நோயாளிகள், கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்துப் பிரிவு மற்றும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை ஆகியவற்றுக்கு தினமும் இரத்தம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய மருத்துவமனைகள் மற்றும் இரத்ததான மையங்களுக்கு சென்று இரத்த தானம் வழங்க முடியும் என தேசிய இரத்த மாற்ற சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய இரத்த தானம் செய்பவர்களுக்கு நாரஹேன்பிட்டி இரத்த மையம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும் ராகம, மஹரகம, குருநாகல் மற்றும் அனுராதபுர மருத்துவமனைகள் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது www.nbts.health என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து இரத்த தானம் செய்வதற்கு எளிதான நேரத்தை பதிவு செய்து கொள்ளுமாறு தேசிய இரத்த மாற்ற சேவை நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.