July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா விசேட ஒழுங்கு விதிகள் சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு!

உலகின் அநேக நாடுகள் ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு சட்டங்களை நிறைவேற்றியுள்ள நிலையில், இலங்கையில் கொரோனா சட்டங்களை நிறைவேற்ற ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

எனினும், இந்த சட்டங்கள் தொடர்பான ஒரு குறுகிய விவாதத்திற்கு பிறகு கொரோனா விசேட ஒழுங்குவிதிகள் சட்டமூலத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கும் எனவும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அத்தோடு நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கையை முன்வைக்க எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, கொவிட் கொரோனா விசேட ஒழுங்கு விதிகள் சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றதன் பின்பு இவ்வாறு நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்குமாறு அவர்கள் கோர உள்ளதாகவும் எம்.பி லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

கொரோனா வேகமாக பரவுவதால் நாட்டிற்கு ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் அவசரக் கூட்டத்தை நாளை (16) காலை 11.00 மணிக்கு கூட்டி, பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் அதன் நடவடிக்கைகள் எவ்வாறு நடத்தப்படும் என்பதை தீர்மானிக்க உள்ளார்.

சபை தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சித் தலைவர்களின் அவசர கூட்டத்தை சபாநாயகர் கூட்டியுள்ளார்.