மாத்தறை – திக்வெல்ல பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை திக்வெல்ல பொலிஸ் பிரிவில் கோந்தெனிய பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த நபர் ஒருவரின் வீட்டுக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த திக்வெல்ல சுகாதார மருத்துவப் பிரிவின் பொது சுகாதார பரிசோதகர்கள் இருவர் தாக்கப்பட்டதுடன், அவர்களின் கடமைக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் இருவரும் மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக சுகாதார ஊழியர்களின் சேவைக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.
இதேவேளை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பண்டாரகம – அட்டலுகம பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது உமிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து 6 மாதங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.