இலங்கையில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் 22,180 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று வரையில் நாட்டில் 351,533 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக தொற்றாளர் எண்ணிக்கையில் வேகமான அதிகரிப்பை காணக் கூடியதாக இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரங்களில் மூவாயிரத்திற்கும் குறைவான நோயாளர்கள் நாளாந்தம் பதிவாகி வந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது மூவாயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை நாட்டில் கொவிட் மரண எண்ணிக்கையிலும் வேகமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது நாளாந்தம் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டியுள்ளது.
இதன்படி கடந்த ஒருவார காலப்பகுதியில் 919 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளது என்பதனையே எடுத்துக் காட்டுவதாக சுகாதார தரப்பினர் கூறுகின்றனர்.
இதனால் மக்கள் தங்களை தாமே சுயகட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி தேவையில்லாது வீடுகளை விட்டு வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.