July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச வைத்தியசாலைகளின் 50 வீத கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்க தீர்மானம்!

(File Photo)

நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும்  50 வீத கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார பணியாளர்கள் முடியுமானவரை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பணியாற்றி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாவட்ட ரீதியில் கொவிட் மத்திய நிலையத்தை அமைத்து அனைத்து கொரோனா நோயாளர்களையும் சோதனைக்குட்படுத்தி, பின்னர் பொருத்தமான சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் வகையிலான திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு கொரோனா நோயாளர்களுக்கான வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கு போதுமானளவு அம்பியூலன்ஸ் வண்டிகளை ஈடுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடலின் போது யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் 60 வயதிற்கு மேற்பட்டோர் அபாய நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு மாதாந்த சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு செல்லும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.