November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண எல்லைகளில் முப்படையினரின் ஒத்துழைப்புடன் பொலிஸார் விசேட சோதனை

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில்,மாகாண எல்லை பகுதிகளில் முப்படையினரின் ஒத்துழைப்புகளுடன் பொலிஸாரால் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் போதும் தேவையானோர் மாத்திரமே பயணிக்க முடியும். இது தொடர்பில் விசேடமாக கண்காணிக்குமாறு மாகாண எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகள் , நடமாடும் கண்காணிப்பு பிரிவு மற்றும் மோட்டார் சைக்கிளில் கண்காணிப்புக்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்புகளுக்கு இராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படையின் ஒத்துழைப்புக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.குறிப்பாக மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கக் கூடிய பிரதான வீதிகள் ,குறுக்கு வீதிகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட சகலவையும் கண்காணிக்கப்படவுள்ளன. இதே போன்று ஏனைய மாகாண எல்லைகளிலும் பயணிக்க முடியாது.

மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்துக்கள் இயங்க முடியாது.மீறி இயக்கப்பட்டால் பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்படுவர் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.