சவூதி அரேபியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சருடன் இருதரப்பு முன்னுரிமைகள் குறித்து இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடியுள்ளார்.
சவூதி அரேபியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் அடெல் பின் அஹமத் அல்-ஜுபைருடன் இணையவழி கலந்துரையாடலின் போது, சவூதி அரேபியாவுடனான இருதரப்பு உறவுகளை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பாராட்டியுள்ளார்.
இலங்கைக்கான அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளுக்கு உறவை ஆழப்படுத்தி, விரிவாக்குவதற்காக சவூதி அரச குடும்பம் நல்கிய பங்களிப்புக்களை தினேஷ் குணவர்தன நினைவு கூர்ந்துள்ளார்.
இரு நாடுகளினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் உதவியமையை சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கியமைக்காக சவூதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
திறமையான மற்றும் தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்குமாறு இலங்கையின் வெளியுறவு அமைச்சர், சவூதி அரேபியாவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சவூதி அரேபியா- இலங்கை இருதரப்புக் கூட்டாண்மைக்கு சவூதி அரேபியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், எதிர்காலத்தில் இலங்கையால் அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளில் இருதரப்பு உறவுகளில் மேலும் வாய்ப்புக்கள் திறக்கப்படும் என்று சவூதி அரேபியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நெருக்கமாகப் பணியாற்றியமையையும், பல சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் வேட்புமனுவை ஆதரித்தமையையும் இரு அமைச்சர்களும் நினைவு கூர்ந்துள்ளனர்.