July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெருமளவு போதைப் பொருட்களுடன் யாழ்ப்பாணத்தில் மூவர் கைது

யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு, கடத்துவதற்கு முயற்சி எடுத்த 2 கிலோ 250 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிர்க்கொல்லி போதைப் பொருளான ஐஸின் (பளிங்கு மெதம்பேட்டமின்) பெறுமதி 2 கோடி ரூபாய்க்கு மேற்பட்டது எனவும் கஞ்சா போதைப் பொருளின் பெறுமதி 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த கடத்தல் சம்பவத்தை கடற்படை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் இணைந்து முறியடித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் 38, 34, 28 வயதுடைய மாங்குளம், இரணைமடு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரின் வழமையான ரோந்து நடவடிக்கையின் போது, பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து வாகனம் ஒன்றில் ஏற்ற முயற்சி செய்துகொண்டிருந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.