நாட்டில் நிலவும் அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சரவை உபகுழுவைத் தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை என இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.
அத்துடன் அந்த குழு இரண்டு வாரங்களில் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் அந்த ஆணைக்குழு இருக்கின்றதா? இல்லையா? என கேள்வியெழுப்பவதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த ஆணைக்குழு இல்லையாயின் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இருக்கும் ஒரு குழு இந்த அமைச்சரவை உபகுழு மட்டுமே ஆகும்.
அதேவேளை இந்தப் போராட்டம் இன்று 32 ஆவது நாளை எட்டியுள்ளதுடன் இந்தக் குழுவினூடாக எதிர்வரும் திங்கட்கிழமை அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதாக அமைச்சரவை உபகுழுவை நியமிக்கும்போது ஊடகங்கள் வாயிலாக அரச தரப்பினர் எமக்குத் தெரிவித்தனர்.
சகல தொழிற்சங்கங்களையும் வேறுவேறாக சந்தித்து ஒரு தீர்மானத்தை எடுப்பதாகக் குறித்த உபகுழு நேற்று கூறியிருந்தது. இந்த நீண்டகால செயற்பாடு அவசியமா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுபோதினி குழு அறிக்கையை செயற்படுத்துவதுடன் அதிபர், ஆசிரியர் சேவையை நிறைவு சேவையாக செயற்படுத்துவதே எமது கோரிக்கை.
இது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவைப் பத்திரம் காணப்படுகின்றது. கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் உள்ளது.
இந்த அமைச்சரவைப் பத்திரத்தைச் செயற்படுத்தவதற்குப் பதிலாகவே அமைச்சரவை உபகுழுவை நியமித்துள்ளனர்.
எனவே, இதனைக் காலம் தாழ்த்தும் செயற்பாடாக மாற்றுவதற்கு முயற்சித்தால் பாரிய பிரச்னையாகவே இதனைக் கருத வேண்டி வரும்’ எனவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.