இலங்கையில் தினசரி பதிவாகும் கொவிட் தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றமை நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத விகிதத்தில் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது அதிகரித்துள்ள கொவிட் தொற்று நிலைமையை சமாளிப்பதற்கும், மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்குமான மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டியுள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் உயிர்களைக் காப்பாற்றுவதே அரசின் அவசர கடமை என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இப்போதைய நிலைமையை கட்டுப்படுத்த தவறினால் 2022 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 18,000க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகலாம் எனவும் நிபுணர்கள்எச்சரித்துள்ளனர்.
இந்த காலப்பகுதியில், தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதப்படுத்தவும் 2வது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸை வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சுகாதார துறையினரின் பணிச்சுமையை குறைக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் நிபுணர்கள் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்த தாமதிக்கும் ஒவ்வொரு தருணமும் இறப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதுடன், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட காலம் எடுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போது பல பகுதிகள் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளில் 20%க்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதியாகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலவரப்படி நாட்டில், கொவிட் சிகிச்சை மையங்கள் 85%க்கு மேல் நிறம்பியுள்ளதுடன் அவசர சிகிச்சைப்பிரிவுகள் 90%க்கும் மேல் நிரம்பியுள்ளன.
நாடு முழுதும் கடந்த வாரம் 528 ஆக இருந்த ஒக்சிஜனை சார்ந்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 646 ஆக கணிசமாக அதிகரித்திருத்துள்ளது.
இந்த போக்கு தொடர்ந்தால், ஒக்சிஜன் விநியோகத்தில் கடுமையான பற்றாக்குறை மற்றும் பராமரிப்பு சிக்கல்களை தவிர்க்க முடியாது போகும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த நெறுக்கடிகளில் இருந்து மீண்டுவருவதற்கு தேசிய அளவில் ஒரு குறுகிய காலத்திற்கு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த வேண்டும் எனவும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்து பொது நிகழ்வுகளையும் 3 வாரங்களுக்கு கட்டுப்படுத்தவும் அல்லது இரத்து செய்யவும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் அனைவருக்கும் பைசர், மொடர்னா, அஸ்ட்ரா செனெகா போன்ற தடுப்பூசிகளை வழங்குவதில் முன்னுரிமை அளித்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவும் நிபுணர்குழு அறிவுறுத்தியுள்ளது.