July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”காணாமல் போனதாக கூறப்படுவோரில் பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்”: அமைச்சர் தினேஷ்

இலங்கையில் போரின் போது காணாமல் போனதாக கூறப்படுவோரில் பலர் வேறு பெயர்களில் வெளிநாடுகளில் வசிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட போரின் போது அவர்கள் முறையற்ற வழிகளின் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக  ‘த ஐலன்ட்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமல் போனதாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான நபர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதை நிரூபிக்க தம்மிடம் அறிக்கைகள் உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளிடம் இருந்து தாம் தகவல்களைக் கோரியுள்ளதாகவும் எனினும் சில நாடுகள் அந்த தகவல்களை வழங்க மறுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் யுத்தத்துடன் தொடர்புடைய பரஸ்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நாடுகள் மட்டுமே அந்த விவரங்களை சட்டப்பூர்வமாக வழங்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. ஆனால் காணாமல் போனவர்கள் இப்போது அவ்வாறு கேள்வி எழுப்பும் அமைப்புகளுடன் தொடர்புடைய நாடுகளிலேயே வாழ்கின்றனர் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

“எங்களுக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்பதை சர்வதேச அமைப்புகளை நம்ப வைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அமைச்சர் தினேஷ்  குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு சான்றிதழ்களை வழங்க அரசாங்கம் ஏற்கனவே முன்வந்துள்ளது என்றும் ஆனால் உறவினர்கள் அதனை மறுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமது உறவுகள் எங்கே, அவர்கள் இறந்துவிட்டார்களா? அல்லது உயிருடன் இருக்கிறார்களா? என்று விசாரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை அதுபோல் அவர்கள் இறந்துவிட்டதாக அரசாங்கம் கருத முடியாது எனவே அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களைக் கொடுக்க முடியாது என்றும் அமைச்சர் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

1988 ஆம் ஆண்டில் காணாமல் போன நபர்கள் சிலர், சமீப ஆண்டுகளில் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. நாங்கள் அவர்களின் இறப்புச் சான்றிதழ்களை வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.