
இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் வெளியில் நடமாடுவதை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் இன்றைய தினத்தில் கொழும்பு நகரில் பிரதான வீதிகள் மக்கள் நடமாட்டம் குறைவடைந்து வாகனங்கள் இன்றி வெறிச்சோடி போயுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
அரசாங்கம் நாட்டில் முடக்கத்தை அறிவிக்கின்றதோ? இல்லையோ? மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகளை விதித்து நடமாட்டங்களை குறைத்துக்கொள்வது நல்லது என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட ஆரம்பித்துள்ளனர் என்பதனை கொழும்பு நகர வீதியின் இன்றைய நிலைமை காட்டுகின்றது.
எப்போதும் கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தை, மருதானை, புறக்கோட்டை, பொரளை உள்ளிட்ட பிரதேசங்களில் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதுடன் மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். ஆனால் இன்றைய தினம் மிகக் குறைந்தளவான வாகனங்களே வீதியில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.