July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்டுப்பாடுகள் தொடர்பில் கொவிட் செயலணி இன்று முடிவெடுக்கும்!

இலங்கையில் கொவிட் மிக மோசமாக பரவிவரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவதா? அல்லது வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதா? என்பது குறித்து இன்றைய தினத்தில் கொவிட் தடுப்புச் செயலணி தீர்மானிக்கவுள்ளது.

இன்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இந்த செயலணி கூடவுள்ளதுடன், இதன்போது நாட்டின் கொவிட் நிலைமை குறித்து ஆராய்ந்து, தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமை தீவிரமடைந்து நாளாந்தம் மரணிப்போரின் எண்ணிக்கை 150 ஐ கடந்துள்ள நிலையில், மேலும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த குறைந்தது மூன்று வாரங்களுக்காவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என்று மருத்து நிபுணர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினரும் மற்றும் எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்திற்கு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டை முழுமையாக முடக்குவது சாதாரண மக்களின் வாழ்வாதரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அது தொடர்பாக தீர்மானத்தை எடுப்பது சிக்கலானது என்று அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அரசாங்கத்திற்குள்ளும் சிலர் நாட்டை முடக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலைமையில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதற்காக இன்றைய தினத்தில் கொவிட் தடுப்பு செயலணி கூடவுள்ளது.

இதன்போது நாட்டை முழுமையாக முடக்குவதா? அல்லது வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதா? என்பது தொடர்பாக தீர்மானம் எடுத்து இன்று மாலைக்குள் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.