January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கம் அதிகார மோகம், மாயை, ஆணவம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது

நாடு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் அதிகார மோகம், மாயை, ஆணவம் மற்றும் பொறுப்பற்ற தன்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,எவ்வாறாயினும்,  நாட்டு மக்களே இதனால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் முதலே அரசாங்கம் இந்த கொரோனா தொற்றை தமது சொந்த அரசியல் திட்டமாக மாற்றியது.அரசாங்கம் கொரோனாவை தோற்கடித்ததாக பெருமையுடன் எவ்வாறு தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது என்பதை மக்கள் நினைவில் கொண்டிருப்பர்.

கொரோனா தடுப்பூசியை முற்கூட்டியே பதிவு செய்யுமாறு பாராளுமன்றத்திலும் அதற்கு வௌியேயும் அரசாங்கத்தை பல தடவைகள் கேட்டுக்கொண்டதோடு,இராஜதந்திர மட்டத்தில் பல்வேறு இராஜதந்திரிகளை சந்தித்து இலங்கைக்கு தேவையான தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு கூறியிருந்தேன்.

எனினும், அரசாங்கம் அவையனைத்தையும் நிராகரித்து அதற்கு பதிலாக தம்மிக்க பாணியை ஊக்குவித்தது.அந்த பாணியை பாராளுமன்றத்திற்கும் கொண்டுவந்து, பாராளுமன்றத்தின் சில அமைச்சர்கள் பாணிக்கான பிரசார முகவர்களாக மாறியிருந்தனர்.

சில அமைச்சர்கள் ஆறுகளில் முட்டிகளை இட்டு பிரபல்யமாக்கியதுடன், மூட நம்பிக்கைகளை சமூகமயப்படுத்தினர்.

தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போது, தொற்று சமூக பரவலாகி விட்டது.

தடுப்பூசியை சரியான நேரத்தில் பெற்றுக்கொள்வது, நிதி ஒதுக்கல், மனித வளங்களை பயிற்றுவித்தல், தடுப்பூசிகளை விநியோகித்தல், திட்டமிடுதல் மற்றும் முன்னுரிமையளிப்பது தொடர்பான தௌிவான திட்டத்தை நாம் எப்போதும் முன்வைத்த போதிலும் அரசாங்கத்திடம் அத்தகைய திட்டம் இருக்கவில்லை.

கனடா போன்ற நாடுகள் ஒரு குடிமனுக்கு பல தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ள போதிலும், இன்னும் அந்த நாடுகளில் அவை மேலதிகமாக காணப்படுகிறது.

எனினும் எமது நாட்டில் இதுவரை ஒரு தடுப்பூசியைக் கூட பெற்றுக் கொள்ளாதவர்கள் உள்ளதாக கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர், தாம் முற்கூட்டியே கூறிய அனைத்தும் நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரில் 80 வீதத்திற்கும் மேற்பட்டோர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் இந்த பிரிவினருக்கு தடுப்பூசிக்கான முன்னுரிமையளிக்க வேண்டியிருந்தது.

ஆரம்பம் முதலே தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டில் அரசாங்கம் அரசியலை பிணைத்துக் கொண்டதுடன், தடுப்பூசி ஏற்றல் தொடர்பில் முன்வைக்கும் அறிக்கைகள் முரண்பாடாக உள்ளது.

கொரோனா தொற்றை தோற்கடித்த அனைத்து நாடுகளும் தடுப்பூசியின் மூலமே அதனை மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு நாடும் இந்த பணியை சுகாதார நிபுணர்களிடமே ஒப்படைத்த போதிலும், இலங்கையில் அத்தகைய நிபுணர்களை ஒதுக்கிவிட்டு விருப்பத்திற்கேற்ப தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

வைத்தியர் மலித் பீரிஸ், வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, வைத்தியர் அனில் ஜாசிங்க, வைத்தியர் ரவி ரணன்எலிய உள்ளிட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை அரசாங்கம் புறக்கணித்ததுடன் குறைந்த பட்சம், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வைரஸ் தொடர்பான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் ஆலோசனையையேனும் ஏற்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.