July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு உட்பட பிரதான நகர வீதிகளில் வாகன நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை!

கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரதான நகர வீதிகளில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் வீதிகளை அபிவிருத்தி செய்யவும், தேவையான பாலங்களை நிர்மாணிக்கவும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த விசேட வீதி அபிவிருத்தித் திட்டம் கொழும்பு, கண்டி, காலி, குருநாகல் மற்றும் கம்பஹா நகரங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் இந்த அபிவிருத்தித் திட்டம் ஏனைய மாவட்டங்களிலும் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வேலைநாட்களில் காலையிலும், மாலையிலும் இந்த நகரங்களில் பல மணிநேரம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலினால் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் இடையூறுகள் ஏற்படுகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விசேட வீதி அபிவிருத்தித் திட்டதின் கீழ், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட 9 வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும், கம்பஹா நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் 15 வீதிகளும், கண்டி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் 12 வீதிகளும், காலி நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 8 வீதிகளும், குருணாகல் நகரில் சில வீதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலும் மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக நெடுஞ்சாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.