July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் யாழ்.பல்கலைக்கழக பீடாதிபதிகள் அசமந்தம்’; கொவிட் 19 தடுப்புச் செயலணியிடம் முறைப்பாடு

நாட்டில் கொவிட் 19 கட்டுப்படுத்தப்பட முடியாத அளவுக்கு பரவலடைந்து வருவதை அடுத்து பொதுச் சேவை,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கடந்த 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2/2021 (IV) இலக்க சுற்று நிருபத்துக்கமைவாக அலுவலக நடைமுறைகளை பின்பற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கு அமைய, பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவுறுத்தியுள்ள போதிலும், யாழ். பல்கலையில் ஒரு சில துறைத் தலைவர்களும், பீடாதிபதிகளும் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது குறித்து இராணுவத் தளபதி தலைமையிலான தேசிய கொவிட் 19 தடுப்புச் செயலணியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகப் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ள நிலையிலும் எதுவித பொறுப்புமற்ற நிலையில் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த துறைத்தலைவர்கள் தமது திணைக்களப் பணியாளர்களை கட்டாயப்படுத்தி பணிக்கு வருமாறு வற்புறுத்துகின்றனர் எனவும், கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட ஊழியர்களின் அலுவலகங்களைத் தொற்று நீக்குவதற்கும், அவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களைத் தனிமைப்படுத்தி வைப்பதற்கும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும், பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கடந்த 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2/2021 (IV) இலக்க சுற்று நிருபத்துக்கமைவாக அலுவலக நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அந்தச் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் உள்ளக சுற்று நிருபத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ள போதிலும் துறைத்தலைவர்கள் சிலர் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றனர் என்றும் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஊழியர்களால் தேசிய கொவிட் 19 தடுப்புச் செயலணிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.