January 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்

அத்துமீறி எல்லை தாண்டி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன்பிடிப் படகுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

நீண்ட காலமாக காரைநகர் கடற்படை தளத்தினை அண்டிய பகுதியில்,சுமார் 210 இந்திய மீன்பிடிப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத செயற்பாடுகளினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமையினால்,குறித்த படகுகளை விற்பனை செய்து கிடைக்கின்ற பணத்தை தமக்கு வழங்குமாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அதேபோன்று, குறித்த படகுகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கின்ற பணத்தை படகு உரிமையாளர்களுக்கு வழங்குமாறு இந்தியத் தரப்புகளினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே,கடற்றொழில் அமைச்சர் நேரடியாக சென்று படகுகளை பார்வையிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக விடுவிக்கப்பட்ட போதிலும்,இந்தியக் கடற்றொழிலாளர்களினால் எடுத்துச் செல்லாது கைவிடப்பட்ட நிலையில் சுமார் 138 படகுகளும், 2018 ஆம் ஆண்டு இலங்கையில் புதிய சட்டம் உருவாக்கப்பட்ட பினனர் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட சுமார் 70 படகுகளும் காரைநகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.