
இலங்கை அரசு என்பது ஒரு சிங்கள-பௌத்த அரசாங்கமென்றும் ஜனாதிபதியை ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய சிங்கள-பௌத்த கடும் தேசியவாதிகளும் ஆளும் கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறிவருகின்ற நிலையில் எவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நடத்தப் போகின்றது என்பது புரியாத ஒரு கேள்வி என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கப்போவதாக ஊடகங்களில் வந்த செய்திகளையொட்டி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஊடகங்களின் வாயிலாக எழுப்பியுள்ள கேள்விகளிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனது கேள்விகளை முன்வைத்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்;
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் முயற்சிப்பதாக பல ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.அதனுடைய முதற்கட்டமாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களுடன் இரகசிய சந்திப்பொன்றை சுமந்திரன் நடத்தியதாகவும் அதன் பிரகாரம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை கையாள்வதற்கு அரசு சார்பில் பஸில் ராஜபக்ஷவை ஜனாதிபதி நியமித்திருப்பதாகவும் அவருடனேயே அந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று பேராசிரியர் பீரிஸ் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. பேச்சுவார்த்தை ஒன்று நடப்பதாக இருந்தால், அது புதிய அரசியல் சாசனம் பற்றிய பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டுமென்றும் சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அதனை கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இப்பொழுது பதவியில் இருக்கும் ஜனாதிபதியும் சரி அரசாங்கமும் சரி சிங்கள மக்களிடம் ஓர் ஆணையைப் பெற்று வந்திருப்பதாக அவர்களே மீண்டும் மீண்டும் கூறியிருக்கின்றார்கள். அந்த ஆணையானது இலங்கை என்பது சிங்கள-பௌத்த நாடென்றும் அதனைப் பாதுகாத்து சிங்கள மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பை ஜனாதிபதியிடம் கையளித்திருப்பதாகவும் இலங்கை அரசு என்பது ஒரு சிங்கள-பௌத்த அரசாங்கமென்றும் ஜனாதிபதியை ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய சிங்கள-பௌத்த கடும் தேசியவாதிகளும் ஆளும் கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறிவருகின்றனர். இந்த நிலையில் எவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நடத்தப் போகின்றது என்பது புரியாத ஒரு கேள்வி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்காளியாக இருந்த முன்னைய அரசாங்கத்தில் நான்கு வருடங்கள் முயற்சி செய்தும் இவர்களால் ஒரு புதிய அரசியல் சாசனத்தை கொண்டுவர முடியவில்லை. ஒரு புதிய அரசியல் சாசனத்தை அப்பொழுது கொண்டுவரவேண்டும் என்பதற்காக வடக்கு-கிழக்கு இணைப்பை வற்புறுத்துவதைக் கைவிட்டார்கள். வடக்கு-கிழக்கில் பௌத்தத்திற்கு முதலிடம் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்றார்கள். இவ்வளவையும் விட்டுக் கொடுத்தும் கூட ஒரு புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வருவதிலிருந்து இவர்கள் ஏமாற்றப்பட்டார்கள். இவர்கள் பங்காளியாக இருந்த அரசாங்கமே இவர்களை ஏமாற்றியிருக்கக்கூடிய சூழ்நிலையில், சிங்கள பௌத்தத்தை காப்பாற்றுவதற்காகவே வந்துள்ள புதிய அரசாங்கத்திடம் என்னவிதமான புதிய அரசியல் சாசனத்தை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்?
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கு-கிழக்கில் நாளாந்தம் புதிது புதிதாக தமிழ் மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்றது.வடக்கு-கிழக்கில் இருக்கின்ற புராதன சின்னங்கள் அனைத்தும் சிங்கள பௌத்த சின்னங்களாக முத்திரை குத்தப்படுகின்றன.புராதன சைவக் கோயில்கள் பௌத்த விகாரைகளாக மாற்றப்படுகின்றன.பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்.காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எத்தகைய நடவடிக்கையினையும் மேற்கொள்ள இன்றைய அரசாங்கம் தயாராக இல்லை.ஜெனிவா தீர்மானங்கள் அனைத்தும் குப்பையில் வீசப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் தமிழர்களின் இருப்பே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்திலுள்ள அதிகாரங்களே தொடர்ந்தும் பறிக்கப்பட்டு வந்திருக்கின்றது.இவ்வளவற்றையும் செய்யும் அரசாங்கத்திடம் முதலில் இவை அனைத்தையும் நிறுத்துமாறு கோருவதற்கு கூட்டமைப்பு எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது?
குறைந்தபட்சம் தமிழ்த் தேசியத் தரப்பிலிருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளையும அழைத்து இதற்கு எதிராக நடவடிக்கை எதனையும் இவர்களால் முன்னெடுக்க முடிந்ததா? இதனை இவர்கள் செய்யவில்லை என்பதற்காகவே 13ஆவது திருத்தத்தை பாதுகாப்பதற்கும் தமிழ் மக்களின் இருப்பிற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நாம் கூட்டாக இயங்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களின் பங்காளிக் கட்சியான ரெலோ இயக்கம் சில முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்பதையும் அதனை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இன்றைய சூழ்நிலையில் இலங்கையின் அதிபர்,ஆசிரியர் சம்பள முரண்பாட்டையே தீர்க்க முடியாத இந்த அரசாங்கம் போலிக் காரணங்களை முன்னிறுத்தி அவர்களை கைது செய்து அவர்களின் ஜனநாயக உரிமையை பறித்திருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் தங்களது கோரிக்கையை ஐ.நா.விடம் முன்வைத்துள்ளனர். இதனைப் போலவே இஸ்லாமிய சகோதரர்களும் இந்த அரசாங்கத்தின் மேல் நம்பிக்கையற்று ஐ.நா சபையிடம் முறையிட்டுள்ளனர்.அது மாத்திரமல்லாமல், வெள்ளைவான் கடத்தல்களால் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறு எத்தகைய விடயத்தையும் உள்நாட்டில் தீர்க்க முடியாமல் அனைத்து தரப்பினரும் ஐ.நா.வை நோக்கி படையெடுக்கின்ற ஒரு நிலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 40/1 தீர்மானமானது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பல பணிகளை சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால் இலங்கை அரசாங்கமானது வழக்கம் போலவே ஐ.நா.வின் பரிந்துரைகள் எதனையும் கவனத்தில் கொள்ளாது குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது. குறிப்பாக இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்காததன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியமானது இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்ற ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப் போவதாக எச்சரித்திருக்கின்றது. அதனைப் போன்றே அமெரிக்க செனட் சபையும் இலங்கை அரசாங்கத்தினுடைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்திருப்பதுடன், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமையையும் சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கை அரசாங்கம் சீனாவுடன் இணைந்து கொண்டு பிரித்தானியா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு எதிராக செயற்பட்டு தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ள சூழலில், அந்த அரசாங்கங்களின் கடும் அதிருப்திக்கும் ஆளாகியுள்ளது.
இலங்கை தனது கைகளால் கொள்ளிக்கட்டையை எடுத்து தனது முதுகில் தானே சொறிந்து கொண்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பஸிலுடனான பேச்சுவார்த்தை என்பது இலங்கையை மேற்கண்ட நாடுகளின் அழுத்தத்திலிருந்து காப்பாற்றுவதற்காகவா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
யதார்த்தங்கள் இவ்வாறிருக்க, அரசுடன் மேற்கொள்ளப் போகின்ற பேச்சுவார்த்தை என்பது இலங்கை அரசாங்கத்தை மீண்டும் ஐ.நா.வின் பிடியிலிருந்து பிணை எடுக்கும் முயற்சிபோல் தோன்றுகின்றது. கடந்த அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக அதனை ஐ.நா.வில் பிணையெடுத்த வரலாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்கனவே இருக்கின்றது.அதே போன்று இந்த அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படப் போகின்றதா என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு எழுந்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் பங்காளிக் கட்சிகளும் இந்த முயற்சிகளின் ஆபத்தினை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கேட்டுக்கொள்கிறது. சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதும் தவறான நேரத்தில் சரியான முடிவெடுப்பதும் எப்போதும் ஆபத்தானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.