July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தம்மிக்க பாணிக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டது!

இலங்கையின் கேகாலையை சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவரால் கொரோனவை தடுக்கவென தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பாணி மருந்துக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர், வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஆயுர்வேத சிகிச்சை முறை தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது, தம்மிக்க பாணி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஆயுர்வேத ஆணையாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

”நாட்டில் 14 ஆயுர்வேத மருந்துகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை சட்டரீதியான மருந்துகளாகும். ஆனால் குறிப்பிட்ட தம்மிக்க பாணி என்ற மருந்துப் பொருளுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனபோதும் அது தொடர்பில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அந்த மருந்தின் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தாத காரணத்தினால் அந்த அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை ஒழிக்கும் வகையில் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் குறித்த பாணி மருந்தை கண்டுபிடித்துள்ளதாக தம்மிக்க பண்டார என்பரால் கடந்த வருடத்தில் அறிவிக்கப்பட்டதுடன், அந்த விடயம் நாட்டில் பிரதான பேசுபொருளாகவும் இருந்தது.

இதன்போது சுகாதார அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்டோருக்கும் அந்த மருந்து வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.