தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக இலங்கைக்கு வந்த 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
படகொன்றின் மூலம் இலங்கை வந்துள்ள குறித்த இளைஞன், குருநகர் பகுதியில் உறவினர் வீடொன்றில் தங்கியிருந்த போது, நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டில் தனது குடும்பத்துடன் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்றிருந்த ரொனால்ட் ஜுட் என்ற பெயருடைய குறித்த நபர், கடந்த 8 ஆம் திகதி கடல் வழியாக யாழ்ப்பாணம் வந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நபரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்பின்னர் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இவ்வாறான நடவடிக்கைளுக்கு உதவும் மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.