டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்கு ஜப்பானியத் துதுவர் அகிரா சுஜியாமா, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, 1.45 மில்லியன் டோஸ் அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கிய ஜப்பான் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும், இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நன்றிகளை கூறிக்கொள்வதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரு நாடுகளுக்குமிடையேயான இராஜதந்திர உறவுகள் தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெறுவதால், இரு நாடுகளினதும் இணைந்த நினைவேந்தல் விழாவை நடாத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஜப்பானிய முதலீட்டின் கீழ் இலங்கையில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்த தகவல்களையும் இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.