கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகளில் இருந்து மக்களை காப்பாற்றும் போராட்டத்தில் சுகாதார தரப்பினரால் செய்ய முடியாத சேவையை பாதுகாப்பு படையினர் செய்து காட்டியுள்ளதாகவும், சுகாதார வைத்திய துறையினரை விட வேகமாக தம்மால் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடிந்துள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இதனை கூறினார்.
தேசிய பாதுகாப்பு என்பதை முதலில் சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.நாட்டுக்கு எதிரான சர்வதேச ஆக்கிரமிப்பு போன்று, உள்நாட்டில் பிரிவினைவாத அல்லது மதவாதத்தை தூண்டி மக்களை கொன்று குவிக்கும் செயற்பாடுகளை தடுப்பது மட்டுமே தேசிய பாதுகாப்பு சார்ந்த விடயம் அல்ல.அனர்த்தங்கள்,தொற்று நோய்கள் போன்றவற்றில் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேர்ந்தாலும் பாதுகாப்பு படையினர் மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது நாட்டு மக்கள் வைரஸ் தொற்று நோய் பரவலுக்கு முகங்கொடுத்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலைமைகளை சுகாதார தரப்பினர் தனியாக கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு பிரச்சினைகள்,பாதிப்புகள் வரும் சகல சந்தர்ப்பங்களிலும் நாம் முன்னின்று மக்களை காப்பாற்றுவோம். எமது சேவையை எவராலும் தடுக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.