July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருளாதாரத்தை விட மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்கிறார் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர்

அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன்,கொவிட் மரணங்களும் அதிகரிக்கும்.எனவே தொற்றாளர்களை குறைக்க கடுமையான நடைமுறைகளை கையாள வேண்டி வரும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த ஐந்து நாட்களாக இரண்டாயிரத்து ஐநூறுக்கு அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதேபோல் கடந்த நான்கு நாட்களாக 90 இற்கு அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.
இறுதியாக பதிவாகியுள்ள கொவிட் மரணங்கள் நூறை தாண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தியாவசிய சேவைகள் தவிர ஏனைய சகல நடவடிக்கைகளை நிறுத்தவும்,அதேபோல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். அத்தியாவசிய ஊழியர்கள் தவிர்ந்து ஏனையவர்களை வீடுகளில் நிறுத்த தீர்மானம் எடுக்க வேண்டும்.இப்போது இறுக்கமான தீர்மானம் எடுத்து தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தாது போனால் அடுத்த கட்டத்தில் மிக மோசமான நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிடும். நாம் தவறிழைக்கும் சந்தர்ப்பத்தில் உயிர்களை பலிகொடுக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை சகலருக்கும் உள்ளது.எனவே பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் கோரிக்கையானது உடனடியாக நாட்டை முடக்க வேண்டும் என்பதேயாகும். தரவுகளை மாத்திரம் நம்பி தீர்மானங்களை எடுக்க வேண்டாம்.நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.வீடுகளில் மரணிக்கும் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையும் காணப்படுகின்றது.எனவே உடனடியாக நாட்டை முடக்க தீர்மானம் எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.