நாட்டில் வேகமாக டெல்டா வைரஸ் பரவிக் கொண்டுள்ளது.வூஹான் மாகாணத்தில் பரவிய வைரஸ் பரவலை விடவும் இரண்டு மடங்கு அதிக வேகத்தில் இலங்கையில் டெல்டா வைரஸ் பரவிக் கொண்டுள்ளது என்பதே எமது ஆய்வுகளின் மூலமாக வெளிப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இறுதியாக எமக்கு கிடைத்த தரவுகளுக்கு அமையவே இந்த நிலைமை வெளிப்பட்டுள்ளது.ஆகவே உடனடியாக கடினமான தீர்மானங்கள் எடுத்து பரவலை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் நிலைமைகள் மிக மோசமாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிரதான வைரஸ் தொற்றாக டெல்டா வைரஸ் காணப்படுகின்றது.அதுமட்டுமல்ல நாளாந்தம் இரண்டாயிரம் அல்லது இரண்டாயிரத்து ஐநூறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினாலும் அதனை விடவும் அதிகமான வைரஸ் தொற்றாளர்கள் உள்ளனர் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.
எனவே இப்போதுள்ள நிலையில் கொழும்பில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு வேகமாக டெல்டா வைரஸ் தொற்று பரவும் என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.