இறுதி வாரத்தில் நாட்டில் 50 வீதத்தினால் அல்லது அதற்கு அதிகமான டெல்டா வைரஸ் பரவல் நிலையொன்று காணப்படுவதாகவும் டெல்டா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ள காரணத்தினால் மரணங்களும் அதிகரிக்க ஏதுவாக அமைந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க கடினமான மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் இங்கிலாந்து தொற்றான அல்பா வைரஸ் தொற்றுப் பரவிய காலத்தில் எம்மால் நிலைமைகளை கட்டுப்படுத்த முடிந்தது.எனினும் தற்போது நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று பரவுகின்றது.இதுவே கடந்த சில வாரங்களில் கொவிட் மரணங்களும்,தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிக்க காரணமாகும்.
எதிர்காலத்தில் வேறு புதிய தொற்றுகள் ஏற்படலாம்.எனவே முடிந்தளவு மக்கள் தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.மிக இலகுவான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றே நாம் கூறுகின்றோம்.
ஆனால் மக்கள் அதனையே பொறுப்பாக செய்யாதுள்ளனர் என்பதே கவலைக்கிடமான நிலையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் நிலைமையோ அல்லது இந்தோனேசியாவின் நிலைமையோ இலங்கையில் உள்ளது என கூற முடியாது. இலங்கையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை.50 வீதத்தினால் அல்லது அதற்கு அதிகமான வீத டெல்டா வைரஸ் பரவல் உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
மிக வேகமான வைரஸ் தொற்றும் நிலையொன்றே காணப்படுகின்றது.இதே நிலைமை ஏனைய நாடுகளிலும் காணப்பட்டது.இந்தியா,இந்தோனேசியா நாடுகளிலும் இதுவே நடந்தது.எனவே எமது நாட்டிலும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.