-மித்ரசகி
கொரோனா அச்சம் முதல் அலை, இரண்டாம் அலை என உலகை உலுக்கிவரும் சமகாலப் பகுதியில் ‘கொரோனாவை கட்டுப்படுத்திய நாடு’ என்ற பலகையை மாட்டிக்கொண்டு தெம்பாக இருந்த இலங்கையை அக்டோபர்-04 முதல் கொரோனா பதற்றம் மீளவும் தொற்றிக்கொண்டுள்ளது.
இலங்கையில் கொரோனா அச்சம் பற்றிய உரையாடல்களும் அதுசார்ந்த எச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்கனவே உச்ச அளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறிப்பாக மார்ச்-13 ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தது உறுதியானதைத் தொடர்ந்து பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மார்ச்-20 முதல் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சமூக இடைவெளியை ஏற்படுத்த நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் போடப்பட்டது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்திருக்க அது பெரிதும் உதவியது.
16 ஏப்ரல் 2020 நிலவரப்படி, கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்துள்ள நாடுகளில் 16வது இடத்தில் இலங்கை இருந்தது.
இதனிடையே, ஆஸ்திரேலியாவின் சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர்கள் நிறுவனம் (ஐ.சி.எம்.ஏ) கொரோனா தொற்றை எதிர்கொள்ள நாடுகள் கையாளும் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மதிப்பீடு செய்ய ஆய்வுக்குழு ஒன்றை நியமித்தது.
அந்த ஆய்வில் இலங்கை 9 வது இடத்தைப் பிடித்தது . நியு சிலாந்து, ஹொங் கொங், ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் அந்தப் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்தன.
முதல் அலையும் அரச இயந்திரமும்
இந்நிலையில் கடற்படை முகாமை மையப்படுத்திய கொரோனா பெருவெடிப்பு ஒன்றை ஏப்ரல் இறுதியில் இலங்கை எதிர்கொண்டது.
வெலிசர கடற்படை முகாமில் இருந்து பொலன்னறுவைக்கு விடுமுறையில் சென்ற ஒருவர் கொவிட்-19 நோயாளியாக அடையாளம் காணப்பட்ட பின்னர், முகாமில் உடனடியாக தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டது.
சுமார் 4000 பேர் கடற்படை முகாமுக்குள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஏப்ரல் 28 அன்று – இலங்கையின் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் அனில் ஜாசிங்கவின் கூற்றுப்படி, வெலிசர முகாமுக்குள் மொத்தம் 209 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, ஜூலை 10 அளவில் காந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட தொற்றுப் பரவலில் 300 பேர் வரையில் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டனர்.
ஜூலை 14 அளவில் நாட்டில் உள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டை மடங்கானது.
ஆனால் இந்தப் பரவல்கள் முகாம்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
மினுவாங்கொடை
நீண்ட இடைவெளியின் பின்னரே அக்டோபரில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை நோயாளி மூலம் புதிய அலை கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது, சமூகத்தில் முதலாவது கொவிட்-19 நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து பல மாதங்களுக்குப் பிறகே, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை பணியாளர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.
இந்த மினுவாங்கொடை கொரொனா பரவலை முன்னரைப் போன்ற இன்னொரு அலையாக கருதி கடந்து சென்றுவிட முடியாது.
கடந்த கால கொரோனா பரவல்களின்போது, சமூகப் பரவலை தவிர்ப்பதில் இலங்கை தொடர்ச்சியாக முன்னேற்றமான நாடாகவே காணப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எனினும் முன்னைய சூழ்நிலைகளிலிருந்து மினுவாங்கொடை பரவல் சூழல் பல வழிகளிலும் வேறுபட்டது.
முன்னைய சந்தர்ப்பங்களில் சமூகப் பரவலை கட்டுப்படுத்துவதில் அரச இயந்திரம் காட்டிய அக்கறை இம்முறையும் நீடிக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இலங்கையில் முதல் கொரோனா அலை வீசிய ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 3000 பேரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
எனினும் மினுவாங்கொடை கொரோனா பரவல் வெளிப்பட்ட முதல் மூன்று நாட்களுக்குள் 1000க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
முன்னர் முகாம்களுக்குள் பரவலை கட்டுப்படுத்தியது போன்று மினுவாங்கொடை தொழிற்சாலைக்குள் கட்டுப்படுத்துவது கடினமாகும்.
மினுவாங்கொடையில் முதல் பெண் அடையாளம் காணப்பட முன்னரே பலர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக இலங்கையின் தொற்றுநோயியல் துறை நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இது பெரும் சமூக பரவலுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே மக்களின் விழிப்புணர்வு அவசியமாகின்றது. கொரொனா பரவல் என்பது வெறும் சமூக, சுகாதார பிரச்சினைகளையும் தாண்டிய பெரும் அரசியல் பிரச்சனையாக உருவெடுக்கக்கூடியது.
‘கொரோனா அரசியல்’
சர்வதேச ரீதியிலும் சரி, உள்ளூர் கட்டமைப்புகளிலும் சரி அரசியல் தரப்பினர் தமது நலனுக்கு ஏதுவாக ‘கொரோனா அரசியல் வியூகத்தை’ உருவாக்கும் ஆபத்து நிலவுகின்றது.
இலங்கை மக்கள் கொரோனா தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவையும் இந்த ‘கொரோனா அரசியலை’ மையப்படுத்தியே ஏற்படுகிறது.
கடந்த கால கொரோனா நிலைமைகளிலிருந்து மினுவாங்கொடை நிலைமை வேறுபடுவதும் இந்த அரசியல் காலச்சூழ்நிலையை ஒட்டியதே.
முன்னைய சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னரான அரசியல் சூழலில் மக்களின் பாதுகாப்பு பற்றிய கரிசனைகள் அரசியல் அரங்கில் அதிகம் வெளிப்பட்டன.
ஆளும் தரப்பிலும் சரி, எதிர்த்தரப்பிலும் சரி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதே பெரும்பாலும் பேசுபொருளாக இருந்தது.
எனிலும் சமகாலத்தில் மினுவாங்கொடை பாதிப்பு ஒப்பீட்டளவில் அதிகமாக காணப்படுகின்ற போதிலும் ஆளும் மற்றும் எதிர்த்தரப்புக்களில் இந்த உரையாடல் குறைந்தே காணப்படுகின்றது.
மேலும், கொரோனா நோய் அறிகுறிகள் தென்படாத 80 வீதமான நோயாளிகள் சமூகத்தில் ஆங்காங்கே இருக்கலாம் எனவும், அவர்கள் தொடர்பில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் கடந்த மே மாதப் பகுதியில் இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்த மருத்துவர் ஜயருவான் பண்டார தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, ஜயருவான் பண்டார திடீரென அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அந்த இடத்துக்கு அவருக்கு அடுத்த நிலையில் இருந்த் பிரபாத் அமரசிங்க நியமிக்கப்பட்டார்.
இந்த மாற்றம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தல் தொடர்பான அரச செயற்பாட்டின் நம்பகத் தன்மையை கேள்விக்குட்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.
வடக்கு-கிழக்கிலும் கொரோனா பரவலை காரணம் காட்டியே இராணுவ பிரசன்னத்தை அதிகரிப்பதையும் தமிழர்களின் நினைவுகூரும் உரிமைகளை தடுப்பதையும் அரசாங்கம் நியாயப்படுத்தி இருந்தது.
அவ்வாறே, தற்போது அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பை மக்கள் போராட்டமாக பரிணமிக்க விடாது தடுப்பதற்கான உத்தியாக அரசாங்கம் இந்த மினுவாங்கொடை கொரோனா பரவல் விவகாரத்தை பயன்படுத்தும் வாய்ப்புள்ளதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இந்நிலையில் புதிய கொரோனா அலையில் உள்ள பல்வேறு சமூக- அரசியல் சூழ்நிலைகளையும் உணர்ந்து தற்பாதுகாத்து கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு மக்களையே சார்ந்துள்ளது.
இலங்கையில் சுகாதார சேவைகளை இலவசம் என்ற அடிப்படையில் அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்ற போதிலும், நவீன பாதுகாப்பு மிக்க சுகாதார வசதிகள் போதியளவு இல்லை என்பதுவே நிதர்சனமான உண்மையாகும்.
அபிவிருத்தியடைந்த அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசுகளே கொரோனா சமூகப் பரவல்களிலிருந்து மீள முடியாது தத்தளிக்கையில், இலங்கையில் கொரோனா சமூகப் பரவல் தீவிரமடைந்தால், அதுசார்ந்த இழப்பு மோசமாக இருக்கும் என்பதே யதார்த்தமாகும்.
எனவே, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனை எதிர்கொள்ளும் பொறிமுறைகளில் உள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பரிமாணங்களை உணர்ந்து தமது பாதுகாப்பை தாமே உறுதிப்படுத்துவதே மக்கள் இப்போது செய்யக்கூடிய முக்கிய பணியாகும்.