January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் தவறான முடிவுகளா?’: சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

நிதியமைச்சர் பசிலுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கப்போவதாக ஊடகங்களில் வந்த செய்திகளையொட்டி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இலங்கை சிங்கள, பௌத்த நாடென்று ஜனாதிபதியும் அரசாங்கமும் கூறிவருகின்ற நிலையில் எவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நடத்தப்போகின்றது? என்று சுரேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்காளியாக இருந்த முன்னைய அரசாங்கத்தில் 4 வருடங்கள் முயற்சித்தும் புதிய அரசியல் யாப்பைக் கொண்டுவர முடியவில்லை என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஒரு புதிய அரசியல் யாப்பைக் கொண்டுவரவேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு- கிழக்கு இணைப்பை வற்புறுத்துவதைக் கைவிட்டார்கள்.

வடக்கு- கிழக்கில் பௌத்தத்திற்கு முதலிடம் என்பதை ஏற்றுக்கொண்டார்கள். ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்றார்கள்.

இவ்வளவையும் விட்டுக்கொடுத்தும்கூட ஒரு புதிய அரசியல் யாப்பைக் கொண்டுவருவதிலிருந்து இவர்கள் ஏமாற்றப்பட்டார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளியாக இருந்த அரசாங்கமே இவர்களை ஏமாற்றியிருக்கக்கூடிய சூழ்நிலையில், சிங்கள பௌத்தத்தைக் காப்பாற்றுவதற்காகவே வந்துள்ள புதிய அரசாங்கத்திடம் என்னவிதமான புதிய அரசியல் யாப்பை எதிர்பார்க்கின்றார்கள்? என்று சுரேஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வடக்கு- கிழக்கில் நாளாந்தம் புதிது புதிதாக தமிழ் மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுவதாகவும், வடக்கு- கிழக்கில் இருக்கின்ற புராதன சின்னங்கள் அனைத்தும் சிங்கள பௌத்த சின்னங்களாக முத்திரை குத்தப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எத்தகைய நடவடிக்கையினையும் மேற்கொள்ள இன்றைய அரசாங்கம் தயாராக இல்லை.

ஜெனிவா தீர்மானங்கள் அனைத்தும் குப்பையில் வீசப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் தமிழர்களின் இருப்பே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது.

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்திலுள்ள அதிகாரங்களே தொடர்ந்தும் பறிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பசிலுடனான பேச்சுவார்த்தை என்பது இலங்கையை மேற்கண்ட நாடுகளின் அழுத்தத்திலிருந்து காப்பாற்றுவதற்காகவா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவ்வளவற்றையும் செய்யும் அரசாங்கத்திடம் முதலில் இவை அனைத்தையும் நிறுத்துமாறு கோருவதற்கு கூட்டமைப்பு எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது?”

என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் பங்காளிக் கட்சிகளும் இந்த சூழ்நிலையின் ஆபத்தினைப் புரிந்துகொண்டு செயற்பட வேணடும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.