இலங்கையர்களுக்கு வெளிநாடுகளில் இடம்பெறும் விவாகரத்து, மண நீக்கம் அல்லது சட்ட ரீதியான திருமண முறிவுகளை நாட்டில் ஏற்றுக்கொள்ளும் வகையிலான சட்ட ஏற்பாடுகளை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் திருமணம் செய்த பின்னர் வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கையர்கள் குறித்த நாடுகளில் திருமண வழக்குகளைப் பதிவு செய்து, பெற்றுக்கொள்ளும் தீர்ப்புக்களை இலங்கையில் அங்கீகரிக்காமையால், வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கையர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இலங்கையில் அவ்வாறான வழக்குத் தீர்ப்புக்களுக்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாயின், அவர்கள் மீண்டும் இங்கு விவாகரத்து வழக்குத் தொடர வேண்டியுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகள் இடம்பெறும் விவாகரத்துக்கள், மண நீக்கங்கள் மற்றும் சட்ட ரீதியான திருமண முறிவுகளை அங்கீகரிக்கக்கூடிய வகையில் சட்ட ஏற்பாடுகளை வகுத்தல் பொருத்தமானதென நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட குடும்பச் சட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
அதற்கமைய, வெளிநாடுகளில் இடம்பெறும் விவாகரத்துக்கள், மண நீக்கம் மற்றும் சட்ட ரீதியான திருமண முறிவுகளை இலங்கையில் அங்கீகரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை விதிப்பதற்கு இயலுமான வகையில் சட்ட மூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.