July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு உத்தரவை கடைசி முயற்சியாகவே அரசாங்கம் பரிசீலிக்கும் என்கிறார் கெஹெலிய ரம்புக்வெல்ல

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான கடைசி முயற்சியாக மட்டுமே ஊரடங்கு உத்தரவு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (10) செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கொரோனா நெருக்கடியை தீர்ப்பதற்கு தடுப்பூசி சிறந்த வழியாக கருதப்படுகிறது.அதேபோல்,முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறினால் மாத்திரமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும் என்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

நாட்டை மூடுவதை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும் தேவைப்படும் போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில்,கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளை விதிப்பது சம்பந்தமாக பரிசீலிக்கப்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த வெள்ளிக்கிழமை திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பின்பற்றவேண்டிய கட்டுப்பாடுகள் சம்பந்தமாக அரசாங்கம் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.