July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலை பேராறு ஆற்றுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தருமாறு கிராம மக்கள் கோரிக்கை

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் கிராமம் பகுதியினூடாக செல்லும் பேராறை புனரமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  .

குறித்த ஆறானது 1986 ஆம் ஆண்டு கட்டப்பட்டதுடன், புனரமைக்கப்படாததால் மண் சரிவுகள் மற்றும் ஆறின் நீர் ஓட்டங்கள் இன்றி காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு ஆற்றில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதாலும், பற்றைக் காடுகளாக புற்கள் நிறைந்து காணப்படுவதால் ஆற்றில் இரு மருங்கும் இடிந்து விழுந்து வருவதாகவும் பாரிய அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் புனரமைத்து தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆறு கந்தளாய் பிரதேசத்திலிருந்து ஆரம்பித்து தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை கப்பல்துறை ஊடாக திருகோணமலை கொட்டியாரக் குடா கடலுடன் கலக்கின்றது.

திருகோணமலை மாவட்ட விவசாயிகள் இந்த ஆற்றை தான் பெரிதும் பயன்படுத்தி வருகின்றார்கள். இதனால் ஆற்றில் ஓரமாக சென்ற பாதை கூட இடிந்து போயுள்ளதாகவும் எனவே தடுப்புச் சுவர் ஒன்றினை அமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு, இந்த ஆற்றுக்கான தடுப்புச் சுவர் அமைத்து தருமாறு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

1986 ஆம் ஆண்டு கந்தளாய் குளம் உடைப்பெடுத்து 67 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.