பிரிட்டன் எசெக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சமர்ப்பித்த யோசனைக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பாடநெறிகளைப் பயின்று, தகைமைகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு பிரிட்டனின் எசெக்ஸ் பல்கலைக்கழக பிரவேசத்தைப் பெற்றுக்கொள்ள இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
அத்தோடு, பரஸ்பர விருப்பின் பிரகாரம் பங்கேற்பு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், மாணவர்கள், பீடங்கள் மற்றும் ஊழியர்கள் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்குபடுத்தல் போன்ற நோக்கங்களுக்காகவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.