இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு குறைந்தபட்சம் 4 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை விதிக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கையில்;
கொவிட் நோயாளிகளின் அதிகரிப்பு மற்றும் கொவிட் தொடர்பான இறப்புகள் காரணமாக ஊரடங்கு உத்தரவை விதிப்பது அவசியம்.நாட்டின் தற்போதைய நிலைமையை சுகாதாரத் துறையினரால் சமாளிக்க முடியவில்லை.
கொவிட் நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை கிட்டத்தட்ட 3000 ஐ எட்டியுள்ள அதேவேளை, இறப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு 100 ஐ எட்டியுள்ளது.அதேபோல்,கடந்த 13 நாட்களில் கொரோனா பலி எண்ணிக்கை சுமார் 1000 ஐ எட்டியுள்ளது.
மருத்துவமனைகளின் பிரேத அறைகள் கொவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களால் நிரம்பி வழிகின்றன.அதே நேரத்தில் மருத்துவமனைகளின் பொது வார்டுகளிலும் கொவிட் நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கொவிட் நோயாளிகளின் தொடர்ச்சியான அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக நிலைமையைக் குறைக்கவும் தொற்று விகிதத்தைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதார தரப்பு தெரிவித்திருக்கிறது.
மேற்கூறப்பட்ட தற்போதைய இலங்கையின் கொவிட் நெருக்கடி தொடர்பான செய்திகளை உள்ளூர் ஊடகங்களான அருண மற்றும் லங்காதீப நாளிதழ்கள் தலைப்பு செய்திகளாக வெளியிட்டுள்ளன.