
photo:www.facebook.com/sanithiyan
செல்வச் சந்நிதி ஆலய வெளிப்புற சூழலில் எந்தவிதமான சமய நிகழ்வுகள்,கலை நிகழ்வுகள் மற்றும் நேரத்தி கடன் நிறைவேற்றுதல் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,பக்தர்கள் வீடுகளில் இருந்து சந்நிதியான் அருளை பெறுமாறு வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
செல்வச்சந்நிதி பகுதியில் கொரோனா தொற்றாளர்
அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன் அயற் கிராமங்களிலும் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 2021.07.28 ஆம் திகதி இடம்பெற்ற உற்சவகால ஒழுங்கமைப்பு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு இவ்வருடம் மகோற்சவம் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.ஆலய உள்வீதியில் மட்டுமே பூஜைகள் மற்றும் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன்,வெளிப்புறச் சூழலில் எந்தவிதமான சமய நிகழ்வுகள்,கலை நிகழ்வுகள் மற்றும் நேரத்திக் கடன் நிறைவேற்றுதல் என்பவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் விசேட தனியார்,அரச போக்குவரத்து சேவை இடம்பெறுவதற்கு அனுமதி இல்லை என்பதுடன், வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் 2021.07.16 ஆம் திகதி சுற்றறிக்கையின் பிரகாரம் மதத் தலைவர்கள் உட்பட 100 அடியார்களே உரிய நேரத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.அடியவர்கள் வீடுகளில் இருந்து சந்நிதியான் அருளை பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.