நாடளாவிய ரீதியில் கொவிட் -19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையொன்று காணப்படுகின்ற போதிலும், நாட்டை முடக்குவதற்கோ அல்லது பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தவோ இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என கொவிட் செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதுள்ள கொவிட் நிலைமைகள் குறித்து தொடர்ச்சியாக நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். ஒவ்வொரு வாரமும் கொவிட் செயலணிக் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நாளாந்தம் வைத்திய அதிகாரிகளை நாம் சந்தித்து கலந்துரையாடியும் வருகின்றோம். தற்போது நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் கூறி வருகின்றனர்.
அதனை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். மறுபுறம் நாட்டு மக்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி ஏற்றும் வேலைத் திட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றோம்” என்றார்
எனினும் இப்போது வரையில் நாட்டை முடக்கி, அல்லது பயணக்கட்டுப்பாட்டை பிறப்பித்து நிலைமைகளை கட்டுப்படுத்தும் பாரதூரமான நிலையொன்று ஏற்படவில்லை.செயலணிக் கூட்டத்தில் அதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படவும் இல்லை என அவர் கூறினார்.
அவசியம் ஏற்படின் அதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படும். எவ்வாறாயினும் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் சகல விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.