July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டை முடக்குவது தொடர்பான முடிவுகள் ஒரு சில மணித்தியாலங்களில் மாறலாம்’; பிரதி சுகாதார பணிப்பாளர்

நாட்டை முடக்க தீர்மானிக்கப்படவில்லை என்றாலும் நிலைமைகளை பொறுத்து  ஒரு சில மணித்தியாலங்களில் தீர்மானங்கள் மாறலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் கொவிட் -19 பரவல் குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம்.கொவிட் கட்டுப்பாட்டு செயலணியில் தொடரச்சியாக இந்த காரணிகளை சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ஆனால் நாட்டை முழுமையாக முடக்குவது குறித்து இன்னமும் கொவிட் செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை.

எனினும் இதற்கு முன்னரும் நாளாந்தம் மூவாயிரத்திற்கு அதிகமான கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டை முடக்குவது குறித்து ஆரம்பத்தில் தீர்மானிக்காத போதும்  இறுதி நேரத்தில்  நாட்டை உடனடியாக முடக்க தீர்மானமும் எடுக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இப்போதும் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இன்றைய நிலைமை நாளை எவ்வாறு இருக்கும் என கூற முடியாது.அவ்வப்போது ஒரு சில மணித்தியாலங்களில் தீர்மானங்கள் மாற்றப்படலாம்.

எனவே, நாட்டை முடக்குவதற்கான தேவை ஏற்படாத வகையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதையே நாமும் கேட்டுக்கொள்கின்றோம்  என சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.