இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் 1437 பேரின் உடல்கள் இதுவரையில் மட்டக்களப்பு ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் உள்ள மயானத்தில் அடங்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்தும் அந்த மயானத்திற்கு நாளாந்தம் 25 ற்கும் மேற்பட்ட உடல்கள் கொண்டுவரப்படுவதாகவும், இதனால் இனிவரும் நாட்களில் அங்கு உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாது போகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட இடங்களில் தற்போது ஓட்டமாவடியில் உள்ள குறித்த இடத்தில் மாத்திரமே உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.
இங்கு உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான உதவிகளை இராணுவத்தினரும், சுகாதார பணியாளர்களும் ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றனர்.
இதன்படி இந்தப் பகுதியில் 5 ஏக்கர் காணியில் 40 இந்துக்கள் , 28 கிறிஸ்தவர்கள், 21 பௌத்தர்கள் உட்பட 1437 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதில் அடக்கம் செய்யபப்பட்ட இடங்களில் அடையாள கல்கள் நாட்டப்பட்டு இலக்கங்கள் இடப்பட்டு அந்த இலக்கங்களின் உடல்கள் யாருடையது என்ற பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டு பிரதேச சபையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த 5 ஏக்கர் காணியிலே இன்னும் சுமார் 500 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யமுடியும்.
இருந்தபோதும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாளாந்தம் 25 அல்லது 30 உடல்கள் நாடளாவிய ரீதியில் இருந்து வருகின்றதன் காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் இந்த இடம் முடிந்துவிடும் நிலைமையே இருப்பதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
எனவே இதற்கு தீர்வாக உடனடியாக இன்னுமொரு இடத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.