உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க தவறியதனாலேயே, கொவிட் இறப்பு அதிகரித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னப்ரிய குற்றம் சாட்டினார்.
எனவே இதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கொவிட் வைரஸால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியமைக்கு அமைய சுகாதார அமைச்சோ அல்லது அரசாங்கமோ செயல்படவில்லை.
அதற்கு பதிலாக அரசாங்கம் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியது என அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் தினசரி 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கொவிட் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.சரியான நேரத்தில் தடுப்பூசி போடப்படாமையே இதற்கு காரணம். இதனாலேயே இறப்பு அதிகரித்துள்ளது என தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னப்ரிய சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்துள்ள 5,111 பேரில் 74.99 வீதமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.