July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்டா வைரஸ் முன்னைய வைரஸை விடவும் 100 மடங்கு வேகத்தில் பரவும்; விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

டெல்டா வைரஸ் முன்னைய வைரஸை விடவும் 100 மடங்கு வேகத்தில் சமூகத்தில் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொற்றுக்குள்ளானவரின் தொண்டையில் எந்த அளவுக்கு வைரஸ் பரவுகிறதோ அந்த அளவுக்கு காற்றில் இது பரவல் அடைவதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் முதலாவது அலையின் போது, தொற்றுக்குள்ளானவரின் சளி மாதிரியை பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தும் போது 40 முறை சூடாக்கி பரிசோதிக்கும் போதே வைரஸ் தொற்று உறுதியாகியது.

இரண்டாவது அலையின் போது இந்த பரிசோதனையை 22 தடவை மேற்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் தற்போது முதலாவது தடவையிலேயே வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க முடிகின்றது.

இதன் மூலம் வைரஸ் தொற்று ஒருவருக்கு பரவல் அடையும் வீதம் அதிகரித்து உள்ளதை அறிய முடிகின்றது என்றார்.

ஆரம்பத்தில் இனங்காணப்பட்ட கொவிட்-19 வைரஸ் அல்லது அல்பா வைரஸ் 50 வீத வேகத்தில் பரவக் கூடியது.

ஆனால், தற்போது இனங்காணப்பட்டுள்ள டெல்டா வைரஸ் 100 வீதம் வேகமாக பரவக் கூடியது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் நாளாந்தம் 2000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு, நூறை அண்மித்தளவில் மரணங்கள் பதிவாகின்றன.

சுமார் 30,000 தொற்றாளர்கள் சிச்சை பெற்று வருகின்ற இந்த நிலைமை கடந்த ஒன்றரை ஆண்டுடன் ஒப்பிடும் போது மிகவும் அபாயமுடையதாகும் என்றார்.