பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்களின் உத்தியோகபூர்வ அலுவலக அடையாள அட்டைகளை பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று (09) முதல் தொடங்கப்படும் என போக்குவரத்து மற்றும் சமுதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
எனவே, நாட்டில் பரவியுள்ள தொற்று நோய் சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு பொது மக்களை இராஜாங்க அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் தொழில்களுக்காக செல்லும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வசதியாக மாகாணங்களுக்கு இடையே கட்டுப்பாடுகளுடன், ஏராளமான ரயில்கள் மற்றும் பஸ்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த சேவைகளை மக்கள் அத்தியாவசியமற்ற சந்தர்ப்பங்களில் பயன்படுத்த தொடங்கினால், மீண்டும் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகளை நிறுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்மூலம், அத்தியாவசிய சேவைகளுக்காக பயணம் செய்யும் அனைத்து மக்களும் சிரமத்தை எதிர் கொள்ள நேரிடும் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அனைத்து தனியார் மற்றும் அரச பஸ்களில் பயணிகளின் இருக்கைக்கு ஏற்றவாறு மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனவே, நெரிசலை குறைக்க அமைச்சு அதிக பேருந்துகளை நியமித்துள்ளது.
தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றாத பஸ் நடத்துனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
மாகாணங்களுக்கு இடையே தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 20 க்கும் மேற்பட்ட பஸ் சேவைகளின் வழித்தட அனுமதிகள் இரத்து செய்ய ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.