தமது சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கோரியும் ஆசிரியர்களினால் இன்று யாழ்ப்பாணத்தில் வாகனப் பேரணி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருந்து ஆரம்பித்து, யாழ். நகர வீதி வழியாக மாவட்ட செயலகம் வரையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
வாகன பேரணியானது ஆரம்பமாகி நகரை அடைந்த போது பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் தற்போதைய நாட்டு நிலைமையில் இந்தப் பேரணியை நடத்த முடியாது என தடுத்து நிறுத்தினர்.
எனினும் தாம் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றியே பேரணியை நடத்துவதாக கூறி ஆசிரியர்கள் பேரணியை தொடர்ந்தனர்.
இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை யாழ். பருத்தித்துறையில் ஆசிரியர்களினால் மற்றுமொரு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று முற்பகல் நடத்தப்பட்டது.
வடமராட்சி வலய இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சங்கம் ஆகியன இணைந்து இந்த பேரணி நடத்தப்பட்டது.
பருத்தித்துறை நகரிலிருந்து ஆரம்பித்த பேரணி, பருத்தித்துறை நவீன சந்தை சுற்று வீதியால் பஸ் நிலையம் வரையில் நடத்தப்பட்டது.