July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொவிட் கட்டுப்பாட்டு செயலணியை கலைத்துவிட்டு விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமியுங்கள்’

கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் செயற்பாடுகளினால் எவ்வித முன்னேற்றமும் இதுவரையில் ஏற்படவில்லை.வெறும் ஊடக காட்சிப்படுத்தல் மாத்திரமே இச்செயலணியால் முன்னெடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,இச்செயலணியை நீக்கி விட்டு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கமைய விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் தாக்கத்தினால் ஏற்பட்ட மரணங்கள் அனைத்துக்கும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணி பொறுப்பு கூற வேண்டும். இனியும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படாவிட்டால் கொவிட் தாக்கத்தால் இந்தியா கடந்த மாதங்களில் எதிர் கொண்ட நிலையினை நாமும் எதிர் கொள்ள நேரிடும்.எனவே இராணுவத்தினருக்கு முன்னுரிமை வழங்காமல் சுகாதார தரப்பினருக்கு முன்னுரிமை வழங்கி துரிதமாக செயற்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

தேவைக்கேற்ப சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.நாட்டிலுள்ள அவசர நிலைமையை கருத்திற் கொண்டு விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய அனர்த்த முகாமைத்துவ சபை உருவாக்கப்படுவது கட்டாயமாகும்.நாட்டில் தற்போது கொவிட்-19 வைரஸ் தொற்று தீவிரமாக பரவலடைந்துள்ளதுகொவிட் வைரஸ் தொற்று மற்றும் பதிவாகும் மரணம் தொடர்பிலான தகவல்கள் குறித்தும் சிக்கல் நிலை காணப்படுகிறது.

இந்தியாவை விட இலங்கையின் நிலை பாரதூரமாகும் என சுகாதார தரப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் குறித்தும் பிரச்சினை காணப்படுகிறது.தடுப்பூசி செலுத்தல் சுகாதார அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படாமல்,இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.இவற்றிலும் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.