May 25, 2025 14:18:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தாவிட்டால் இந்தியாவின் நிலை ஏற்படும் என்கிறது இலங்கை வைத்தியர்கள் சங்கம்

கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வேகமான அதிகரிப்பு காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகளில் தடங்கல் நிலையொன்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், வைத்தியசாலைகளில் பாரிய அளவிலான ஒட்சிசன் தட்டுப்பாட்டு நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகவும்,எனவே உடனடியாக பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தி மக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியாவை போன்றதொரு மோசமான நிலைமை உருவாகும் எனவும் இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறித்த உண்மையான நிலைமைகளோ அல்லது டெல்டா வைரஸ் பரவலின் தன்மைகள் குறித்து சுகாதார தரப்பினரால் சரியான தரவுகளை முன்வைக்க முடியாதுள்ளது.எழுமாறான தீர்மானங்களை கொண்டே நடைமுறைப்படுத்த நினைக்கும் முயற்சிகள் இறுதியாக பாரதூரமான முடிவுகளை வெளிப்படுத்தும்.கொழும்பு அல்லது மேல் மாகாணத்தை பொறுத்த வரையில் மிக அச்சுறுத்தலான நிலையொன்று காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று வைத்தியசாலைகளில் உள்ள ஏனைய நோயாளர்கள் அனைவரையும் வீடுகளுக்கு அனுப்பி விட்டு முழுமையாக கொவிட் வைரஸ் தொற்றாளர்களுக்காக வைத்தியசாலைகளை நடத்த வேண்டிய நிலையொன்று உருவாகி வருகின்றது.எனவே மக்களின் அனாவசிய நடமாட்டங்களுக்கு இனியும் இடமளித்தால் நிச்சயமாக இந்தியாவின் நிலையை இங்கும் எதிர்கொள்ள நேரிடும்.

ஆகவே உடனடியாக பயணத்தடையை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மட்டுமல்லாது மாவட்டங்களுக்கு இடையிலும் பயணத்தடையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.இயலுமானால் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியான முழு முடக்கத்தை அறிவித்து நிலைமைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது சிறந்தது எனவும் அவர் கூறினார்.