20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீதான முதலாம் நாள் விவாதம் நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாம் நாள் விவாதம் நாளை மறுதினம் இரவு 7.30 மணிக்கு முடிவடைந்ததும் குழு நிலை ஆரம்பிக்கப்பட்டு அதன்பின்னர் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு 20ஆவது திருத்தச் சட்ட வரைவு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
அதேவேளை, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவில் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிகோலும் சரத்துக்கள் உள்ளிட்ட மொத்தமாக 7 சரத்துக்களை நீக்கிவிட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, முஸ்லிம் தேசியக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன ’20’ ஐ எதிர்ப்பதற்கு தீர்மானித்து எதிராக வாக்களிக்கவுள்ளன.
அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகியன ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எமது மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இன்னும் எம்.பிக்களை நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.