July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உணவிற்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 5வது இடத்தில்!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வான நாடுகளின் பட்டியலில் இலங்கை 5 வது இடத்தில் இருப்பதாக பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் சிந்தனைக் குழுவின் (think tank) ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வளர்ந்த நபர் ஒருவர் சராசரியாக தனது ஊதியத்தில் 66% தமது உணவுக்காக செலவழிக்க வேண்டியுள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் 107 நாடுகளில் வயது வந்தவர்களின் உணவு மற்றும் மாதாந்த சராசரி ஊதியத்திற்கும் உணவிற்கான குறைந்தபட்ச செலவுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பகுப்பாய்விற்காக, உலகளாவிய வாழ்க்கை செலவு தரவுத்தளமான நம்பியோவில் வெளியிடப்பட்ட இந்த ஆண்டின் ஜூன் மாதத்திற்கான தரவை ஆராய்ச்சி குழு பயன்படுத்தியுள்ளது.

12-14 அத்தியாவசிய பொருட்களின் குறைந்தபட்ச தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு ஒரு வயது வந்தவருக்கு 2,100 கலோரிகள் என்ற வகையில் இது உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் சர்வதேச ஊட்டச் சத்துக்கான அமெரிக்கக் குழு பரிந்துரைத்துள்ள அளவுகள் இந்த ஆய்வில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

கொவிட் -19 பரவலுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்த விகிதாசாரத்தில் நாடுகளுக்கிடையே பெரும் ஏற்றத்தாழ்வு இருப்பதை ‘உணவு அடிப்படைகளின் விலை’ தொடர்பான பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.

ஆய்வுகளின் படி, இலங்கையில் ஒரு நபர் குறைந்தபட்சம் பரிந்துரைக்கப்பட்ட உணவிற்காக மாதாந்தம் செலவிட வேண்டிய தொகை 161.23 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

அதே நேரத்தில், வயது வந்தோருக்கான சராசரி மாத ஊதியம் 245.81 அமெரிக்க டொலராக இருந்துள்ளது.

இதன்படி, ஒரு நபர் குறைந்தபட்சம் பரிந்துரைக்கப்பட்ட உணவிற்காக தமது ஊதியத்தில் 66% செலவழிக்க வேண்டியுள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது.

இதில் அவர்களின் குடும்பத்திற்கு உணவளிப்பது அல்லது வாடகை, போக்குவரத்து, பயன்பாடுகள் மற்றும் பிற உணவு அல்லாத கொள்முதல் ஆகியவை உள்ளடங்கவில்லை என “ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

எனினும் அண்டை நாடான இந்தியாவில், ஒரு நபரின் அத்தியாவசிய உணவுகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச மாதாந்த செலவு மாதாந்த ஊதியத்தில் 27 சதவிகிதம் மட்டுமே எனவும் ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.

கடந்த சில மாதங்களாக இலங்கையின் உணவு பணவீக்கம் இரு மடங்காக அதிகரித்தது. அதே நேரத்தில் தொற்று நோய் காரணமாக தனியார் துறை மற்றும் கூலி தொழிலாளர்களின் ஊதியமும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைக்கு இந்த காரணிகள் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய உணவு தேவைக்காக அதிக செலவிடும் நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் சிரியா, நைஜீரியா, எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, கானா, இந்தோனேசியா, அல்ஜீரியா, ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியன தரப்படுத்தப்பட்டுள்ளன.