இலங்கையில் நாளாந்தம் கொவிட் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்லும் நிலையில், மேல் மாகாணத்தில் பல பிரதேசங்களிலும் மயானங்களில் உள்ள தகனசாலைகளில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த தகனசாலைகள் 24 மணிநேரமும் இயங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலைமையில் கொழும்பு, ராகம, களுத்துறை, பாணந்துறை ஆகிய வைத்திசாலைகளின் பிரேத அறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த பிரேத அறைகளில் குளிரூட்டிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உடல்களையே வைக்கமுடியும் என்ற நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையை விடவும் அதிகளவான சடலங்கள் அந்த பிரேத அறைகளுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதால் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், அந்த உடல்களை வேகமாக தகனசாலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தகனசாலைகளை 24 மணிநேரமும் இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையில் தகனசாலைகளில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உதவிகளை இராணுவத்தினர் ஊடக வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.